ஹிந்து முஸ்லீம் இணக்கம் - ஆர்.எஸ்.எஸ்., விருப்பம்

ஹிந்து முஸ்லீம் இணக்கம் - ஆர்.எஸ்.எஸ்., விருப்பம்

அசாமில் வெளியிடப்பட்ட, தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தால், அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும், நாட்டின் பல பகுதிகளில், கும்பல் தாக்குதல்களால், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களும் நடக்கின்றன.இதையடுத்து, ஹிந்து - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர், மோகன் பாகவத், ஜமாத் உலெமா ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பின் தலைவர், மவுலானா செய்யது அர்ஷத் மதானியை, நேற்று சந்தித்தார்.

டில்லியில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. 90 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு குறித்து, மவுலானா செய்யது அர்ஷத் மாதானி கூறியதாவது: ஹிந்து - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை நீக்கி, ஒற்றுமையை ஏற்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, இந்த சந்திப்பு நடந்தது. இதில், கும்பல் தாக்குதல், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருவருக்கும் இடையே நடந்த பேச்சு, மிகவும் ஆரோக்கியமான வகையிலும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.