‘அனிதா’ சினிமா... தந்தை எதிர்ப்பு, டைரக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

‘அனிதா’ சினிமா... தந்தை எதிர்ப்பு, டைரக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் எஸ்.அனிதா. பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த இவர், நீட் தேர்வில் போதிய மதிப்பெண் பெறாததால் எம்பிபிஎஸ் சேர இயலவில்லை. நீட் எதிர்ப்பு தரப்பினர் உதவியுடன் சுப்ரீம் கோர்ட்டில் இவர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர் வேளாண்மை பொறியியல் படிப்பில் சேரப் போவதாக அறிவித்திருந்த அனிதா, திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அரசியல் சர்ச்சைகள் அதிகரித்தன. அனிதா தற்கொலை பின்னணி குறித்த விசாரணை தொடர்கிறது.

இந்நிலையில், ‘டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ்’ என்ற சினிமாவை, ஆர்.ஜே.பிக்சர்ஸ் யார்ல்மார்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அஜய்குமார் என்பவர், படத்தை தயாரித்து இயக்குகிறார். அனிதா வேடத்தில், ‘பிக்பாஸ்’ ஜூலி நடிக்கிறார். இது அனிதாவை மையப்படுத்தும் படம் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சினிமாவுக்கு தடைகோரி அனிதாவின் தந்தை சண்முகம், ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில், ‘என் மகள் அனிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அஜய்குமாரோ, அவரைச் சார்ந்தவர்களோ சினிமா எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். அனிதா பெயரைப் பயன்படுத்தியிருக்கும் அஜய்குமார், எனக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று முறையிட்டுள்ளார்.

இந்த மனு, நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சண்முகம் தரப்பில் ஆஜரான வக்கீல் மகேஸ்வரி, மனுவை வலியுறுத்தி வாதிட்டார். இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அஜய்குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவ.22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.