15 ஆண்டுக்குப் பின் கோயில் திருவிழா!

15 ஆண்டுக்குப் பின் கோயில் திருவிழா!

நாமக்கல் மாவட்டம் கஸ்துாரிப்பட்டி கிராமத்தில் 15 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த கோயில் திருவிழாவை நடத்த அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

கஸ்தூரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிங்காரம் என்பவர், கிராமமக்கள் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது : 
எங்கள் கிராமத்தில் உள்ள பாலி அம்மன் கோயில், இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான இந்த கோயிலில், ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டு வந்தது.

2003ம் ஆண்டில், கோயிலில் சில சடங்குகளை செய்வதில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னையால், திருவிழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதன்பின், ஒரு பிரிவினர் தங்களுக்கு என ஒரு புதிய கோயிலை நிறுவி, கடந்த 5 ஆண்டுகளாக திருவிழா, தேரோட்ட நிகழ்ச்சிகளைத் தனியாக நடத்தி வருகின்றனர். அதே வேளையில், பாலி அம்மன் கோயில் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. பாலி அம்மன் கோயில் திருவிழாவை நடத்த, மாவட்ட கலெக்டரிடம் கடந்த ஜூலை மாதம் மனு அளித்தோம். அவர், இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க சப் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். ஆனால், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். ‘மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும், கிராமத்தில் கூட்டம் நடத்தி, திருவிழாவை அமைதியாக நடத்த 4 வாரங்களில் முடிவு செய்ய வேண்டும்’ என, கடந்த செப்டம்பரில் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்ததால், கோர்ட் அவமதிப்பு தொடர்ந்தோம். இதையடுத்து, தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, திருவிழா நடத்துவது குறித்து முடிவுசெய்ய கோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி நடந்த பேச்சுவார்த்தையில், பாலி அம்மன் கோயில் திருவிழாவை நவம்பர் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை  நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, திருவிழா ஏற்பாடுகளைத் தொடங்கினோம். மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டு போன்ற சடங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ரூ.ஒரு லட்சம் அளவில் செலவிட்டிருக்கிறோம். இந்நிலையில், திருவிழா நடத்த அனுமதி வழங்க முடியாது என இந்து சமய அறநிலையத்துறையும் காவல்துறையும் திடீரென மறுத்துள்ளன. இது, எங்கள் கிராம பொதுமக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.  கோர்ட் உத்தரவை மீறும் வகையில் அதிகாரிகள் இப்படி செயல்படுவது சட்டவிரோதமாகும். 
எனவே, திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த மனுவில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் நேற்று தீர்ப்பளித்தார். கஸ்துாரிப்பட்டி கிராமம் பாலி அம்மன் கோயில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி, திருவிழாவுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.