2,000 ஏக்கரில் ரூ.4,500 கோடி செலவில் மாமண்டூர் புதிய விமான நிலையம்

2,000 ஏக்கரில் ரூ.4,500 கோடி செலவில் மாமண்டூர் புதிய விமான நிலையம்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் அருகே தனியார் பங்களிப்புடன் ரூ.4,500 கோடி செலவில் புதிய விமான நிலையம் அமைக்க விமான நிலைய ஆணையம் பரிசீலித்து வருகிறது. சென்னை விமான நிலையம் 1300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தினமும் 250விமானங்கள் வந்து செல்கின்றன. இங்குஇடப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்குமேல் இதனை விரிவாக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே சென்னைக்கு அருகாமையில் 2-வது விமான நிலையத்தை அமைக்க விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் திட்டமிட்டது. 

தமிழக அரசும் தொழுப்பேடு, ஆயக்குணம், குத்தமங்கலம், கொளத்தூர், மேட்டுக்கொளத்தூர், அறப்பேடு, இந்தலூர், கோட்டப்புஞ்சை ஆகிய 8 கிராமங்களின் வரைபடங்களை வருவாய் துறையினரிடம் இருந்து கேட்டுப் பெற்றது. விமான நிலையம் அமைப்பதற்காக இந்த இடங்களை ஆய்வு செய்வதற்கே வரைபடங்கள் பெறப்பட்டுள்ளன என்று வருவாய் துறையினர் கூறி வந்தனர். இந்தப் பகுதியில் விமான நிலையம் அமையலாம் என்பதால் நிலத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் மாமண்டூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தங்களுக்குச் சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தில் ரூ.4,500 கோடி செலவில் விமான நிலையம் அமைக்கலாம் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்குத் தனியார் நிறுவனம் ஒன்று திட்ட அறிக்கையை அனுப்பியுள்ளது.

தனியார் நிறுவனம் இடங்களை கொடுப்பதால் இது தனியார் பங்களிப்புடன் செயல்படும் விமான நிலையமாக இருக்கலாம்.