26-ம் தேதி விசாரணை அயோத்தி வழக்கு -  உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

26-ம் தேதி விசாரணை அயோத்தி வழக்கு - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  இந்த மனுக்களை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, என்.வி. ரமணா, டி.ஒய். சந்திராசூட், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.  

ஆனால், அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் சமூக மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதல்வர் கல்யாண் சிங் சார்பில்  நீதிமன்றத்தில் வழக்குரைஞராக யு.யு. லலித் வாதாடியுள்ளார். அவர்தான் தற்போது 5 நீதிபதி கொண்ட அமர்வில் நீதிபதியாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யு.யு. லலித் அறிவித்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்ட்டது. முந்தைய அமர்வில் இருந்த நீதிபதி லலித், என்.வி. ரமணா புதிய அமர்வில் இடம் பெறவில்லை. இந்த வழக்கு விசாரணை வரும் 29-ஆம் தேதி புதிய அமர்வில் நடைபெறும் என்று தலைமை நீதிபதி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்தே அன்று வர இயலாத நிலையில் இருப்பதால், அன்று நடைபெறும் விசாரணை ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்தநிலையில், அயோத்தி நில விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான அரசியல் சாசன அமர்வு விசாரணை பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.