5ரூபாய் மருத்துவ சேவை துவங்கியது

5ரூபாய் மருத்துவ சேவை துவங்கியது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, வேங்கடாசலபதி தெருவில் உள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வந்தார். அந்தப் பகுதியில் உள்ள காசிமேடு, கொடுங்கையூர் பகுதி மக்கள் இவரது மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற்றனர்.

தொடக்க காலத்தில் ரூ.2 கட்டணமும் பின்னர் ரூ.5 ம் வாங்கினார்அவரது கடைசி காலத்தில் ரூ.10-க்கு சிகிச்சை அளித்தார். இருப்பினும் தொடக்க காலத்தில் இருந்தே அவரை 2 ரூபாய் டாக்டர் என்றே அப்பகுதியினர் அழைத்தனர்.

டாக்டர் ஜெயச்சந்திரன் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது  உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இது, இந்தியா முழுதும் ஆச்சரியமாக பேசப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி என பலரும் அவரது சேவையை மேற்கோள் காட்டி இரங்கல் தெரிவித்தனர்.

டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்ததால் அவரது மருத்துவமனை இனி செயல்படாது என்று கூறப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

டாக்டர் ஜெயச்சந்தரனின் மனைவி வேணியும் டாக்டர்தான். இவர்களுக்கு சரவணன், சரத் ராஜ் என இரண்டு மகன்கள். அவர்களும் டாக்டர்கள்தான். இப்போது அவர்கள் 3 பேரும்  அந்த மருத்துவமனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டாக்டர் ஜெயச்சந்திரன் இருந்தபோது குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது போல் இப்போதும் அதையே செய்கின்றனர்.

டாக்டர் வேணி ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். மகன் சரத்ராஜ் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள், தற்போது கட்டணம் எதுவும் கேட்பதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் விரும்பிய பணத்தை அங்கு வைக்கப்பட்டுள்ள டாக்டர் ஜெயச்சந்திரன் படத்தின் முன் வைத்துவிட்டு செல்லலாம். நோயாளிகள் 5 ரூபாயோ 10 ரூபாயோ தங்களால் இயன்றதை வைத்துவிட்டு செல்கிறார்கள்.

இந்த மருத்துவ சேவை குறித்து டாக்டர் வேணி கூறும்போது, ‘அவர் இருந்த போதே நாங்களும் சிகிச்சைகள் செய்து வந்தோம். அவர் போன பின், அவரது பணியை தொடர வேண்டும் என்று முடிவு எடுத்து நாங்கள் 3 பேரும் இப்போது சிகிச்சை அளித்து வருகிறோம்இந்தப் பகுதி ஏழைகள் அவர் இருந்தபோது பயன்பெற்றது போலவே இப்போதும் பயன்பெற வேண்டும்! அதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்! என் கணவர் இருந்தபோது தினமும் 200 பேர் வரை சிகிச்சை பெற்று செல்வார்கள். இப்போது 30 பேர் வரை வருகிறார்கள்என்றார்.

டாக்டர் சரத் ராஜ் கூறும்போது, ‘அப்பா இறந்த போது வந்த மக்களைப் பார்த்து நாங்கள் உணர்ச்சிவசப்பட்டோம். அவர்களுக்கு எங்களது சேவை தொடர வேண்டும் என்ற உத்வேகத்தை அது கொடுத்ததுஎன்றார்.

இந்த மருத்துவமனை தினசரி காலை 9.30 மணியில் இருந்து இரவு 9.30 மணிவரை 12 மணிநேரம் செயல்படுகிறது. காலையில் டாக்டர் வேணி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். மற்ற நேரங்களில் இரு மகன்களில் யாராவது ஒருவர் சிகிச்சை அளிக்கின்றனர்.