76 போலி வழக்கு விசாரிக்க தடை 7 வக்கீல் ஆஜராக ஐகோர்ட் அதிரடி

76 போலி வழக்கு விசாரிக்க தடை 7 வக்கீல் ஆஜராக ஐகோர்ட் அதிரடி

தமிழகக் கோர்ட்களில் விபத்து காப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 76 போலி வழக்குகளை விசாரிக்கத் தடை விதித்த ஐகோர்ட், சம்பந்தப்பட்ட 7 வக்கீல்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

ஐகோர்ட்டில் சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணைகளில், ஒரே விபத்துக்கு 3 கோர்ட்களில் காப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்த கோல்மாலும், 56 வழக்குகளின் கோப்புகள் மாயமாகியிருப்பதும் அம்பலமானது. இதையடுத்து, இந்த விவகாரங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.

மேலும், மொத்தம் ரூ.60.71 கோடி அளவில் காப்பீடு கோரி 353 போலி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும் அம்பலமானதால், அவை குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை ஐகோர்ட் நியமித்திருந்தது. இந்த ஆய்வுக்குழு கடந்த மாதம் தாக்கல் செய்த 2வது இடைக்கால அறிக்கையில், போலி விபத்து காப்பீடு வழக்குகள் குறித்த ஆய்வுத்தகவல்களுடன், போலி வழக்குகளைத் தாக்கல் செய்த 7 வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப்பின் நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள்:

 நீதிபதி சந்துரு குழு விசாரணைக்கு இனிமேலும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் ஆஜராகாமல் இருந்தால், இந்த மோசடியில் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதி, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட நேரிடும்.

 விபத்து காப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட 76 போலி வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது.

 போலி காப்பீடு வழக்குகளில் தொடர்புள்ள 7 வக்கீல்களும், வரும் டிசம்பர் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.